”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது. இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்குகியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஓர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை நிலவரம் :
இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.