காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை நிலவரம்:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.