இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்… உருமாறியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை – தமிழக கடற்கரையை நோக்கி நெருங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. நேற்று முன் தினம் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது புயலுக்கு முந்தைய நிலையில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் 4 முதல் 5 நாட்கள் மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.