வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல மாவட்டங்களில் தினம் தினம் வெயில் சதம் அடித்துக்கொண்டும் வருகிறது. இதனையடுத்து, வரும் மே 1-ஆம் தேதி முதல் வரும் 3-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதைப்போலவே, இன்று 30-ஆம் தேதி முதல் வரும் மே 4-ஆம் தேதி வரை அதாவது அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.