வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதனை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
அதேபோல், நாளை முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.