உருவாகிறது அடுத்த புயல்! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ள நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசாவிற்கு தெற்கே 430 கிமீ தொலைவு மற்றும் மேற்கு வங்கத்திற்கு தெற்கே 590 கிமீ-ல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வரும் 25ம் தேதி வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
புயல் எதிரொலியாக சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எதிரொலியையடுத்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேஜ் புயல்
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘தேஜ்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும் வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகர்ந்து நாளை மிகத்தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.