நாளை உருவாகிறது ‘புயல்’… புயலுக்கு பெயர் ஃபெங்கல்.! எங்கு கரையை கடக்கும்?
வங்கக் கடலில் நாளை உருவாகவிருக்கும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த 'Fengal' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது.
தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் மெதுவாக நகர்வதால் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், தென் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் பெயர் ஏன்?
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அனைத்திற்க்கும் பெயர் சூட்ட ஒரு தனி அமைப்பு உள்ளது. அது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்தும் பெயர்களை வாங்கி வரிசைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் “ஃபெங்கல்” என்ற பெயர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தது ஆகும். கடந்த அக்டோபர் 25ம் தேதி அன்று ஒடிசா கடற்கரை கடந்த ‘டானா’ புயலை தொடர்ந்து ‘ஃபெங்கல்’ புயல் உறவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் எங்கே கரையை கடக்கும்
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இந்த புயல், இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, புயலாக மாறி தமிழகத்தை நெருங்கும் போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, 29ம் தேதி புதுச்சேரி – சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நேரத்தில் தெற்கு ஆந்திராவிலும், வட தமிழக கரையோரங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
இருந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக நகர்ந்து வருவதால் அதனுடைய போக்கை கணிப்பது சிரமமாக உள்ளது. இனி அடுத்தடுத்த நாட்களில் இந்த புயலின் தாக்கம் எவ்வாறு இருக்குமென தெரிய வரும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் காற்றின் வேகம் அதிகபட்சமாக வீசும் என்பதால்,நேற்றைய தினம் முதல் 29ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 4 மாவட்டங்களையும் 12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.