ரெட் அலர்ட்: மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.!
தமிழ்நாட்டில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது.
இதன் காரணமாக, இன்று (நவ்.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
அந்த வகையில், இன்றைய தினம் (நவ.26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனபதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (நவ.27) கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
மேலும், இன்று முதல் நவ.30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனபதால், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
சூறாவளிக்காற்று
நாளை புயல் உருவாக இருப்பதால், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.