சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!
சென்னையில் காலை முழுவதும் வெயில் அடித்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அடையார், வடபழனி, கோட்டூர்புரம், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
காலை முழுவதும் வெயில் அடித்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழகம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல், நாளை முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்றும் நாளையும்) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.