வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!
ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைக்கும் வேளையில், மறுபக்கம் கனமழை வெளுத்து வாங்கும் என்கிற குளுகுளு அப்டேட் ஒன்றை வானிலை மையம் கொடுத்துள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில், வருகின்ற ஏப்ரல் 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களில் கனமழை
அதன்படி, தமிழ்நாட்டில் (ஏப்., 3ம் தேதி) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
15 மாவட்டங்களில் கனமழை
தமிழ்நாட்டில் (ஏப்., 4) மற்றும் (ஏப்.,5) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.