வங்கக் கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வருகின்ற 17ம் தேதி வாக்கில் இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 17ம் தேதி தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.