உருவாகியது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. நாளை ‘டானா’ புயலை சமாளிக்குமா ஒடிசா?
இது நாளை மறுநாள் (அக்.23) புயலாக வலுப்பெற்று ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது.
ஒடிசா : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் (அக்.23) புயலாக வலுப்பெற்று ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது.
இந்த புயலுக்கு “டானா” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த புயல் அக்.24ம் தேதி காலைக்குள் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கிச் செல்லும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது.
ஆனால், ஒடிசா பக்கத்தில் புயல் கரையைக் கடப்பதால் அந்த பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புயலின் தாக்கத்தை குறைக்க மாநில அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தயார் நிலையில் உள்ளது. புயலை சமாளிக்க ஒடிசாவின் அனைத்து நிர்வாகமும் தயாராக இருக்குமாறு ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.