தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கனமழை காரணமாக, மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகள்), கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி வரையில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய விதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.