மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு சராசரி வெப்பநிலையை விட 2,3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33-36 டிகிரி செல்சியஸை எட்டலாம் என்றும், உள் மாவட்டங்களில் 38-40 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 19 வரை மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் இதனால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் படி, வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 16) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், நாளை (ஏப்ரல் 17) முதல் ஏப்ரல் 19 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிடி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள், நண்பகல் நேரமான காலை 11 மணி முதல் – பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, இலகுவான ஆடைகள் அணிவது, மற்றும் நிழல் உள்ள இடங்களில் இருப்பது ஆகியவை பொதுவான அறிவுரைகளாக பரிந்துரைக்கப்படுகின்றன.