மதியம் 1 மணி வரை இந்த 21 மாவட்டங்களில் மழை பெய்யும்.!
சென்னை, செங்கல்பட்டு உட்பட 21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
21 மாவட்டங்களில் மழை
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு உட்பட 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மதியம் 1 மணிக்குள்) மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலூர், கரூர், நாமக்கல், சிவகங்கை ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழையும், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மதியம் 1 மணிக்குள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.