வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Boat - Nagapattinam

சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசைப்படகுகள், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என நாகை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கும் அனைத்து மீனவர்களும் நவ.23-ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். வங்கக்கடலில் 23ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மறு அறிவிப்பு வரும்வரை நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் 23.11.2024-க்குள் கரை திரும்பிட வேண்டும் என மீனவர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்