எச்சரிக்கை.! முடிந்தது கத்தரி வெயில்…இனிமேல் வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம்.!
கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகுமாம். இதனால், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி:
நேற்று மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு:
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.