தெற்கில் குளிர்ச்சி.. வடக்கில் வறட்சி.! ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
சென்னை: ஒரு பக்கம் தென் மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் உட்பட தென் தீபகற்பத்தின் சில பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக தமிழகம், கேரளாவுக்கு இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் 24ஆம் தேதி வரை கடுமையான அலை வீச வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.