உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை எச்சரிக்கை: பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு!
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பெய்து வரும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த இரண்டு மாநிலங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால், மலைப்பகுதிகளில் உயிரிழப்புகள் மற்றும் பொருட்செதங்கள் ஏற்பட்டுள்ளன. சிம்லாவில் இடிந்து விழுந்த கோயிலின் இடிபாடுகளில் இருந்து மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், ‘ஆரஞ்சு அலர்ட்’ விதிக்கப்பட்டுள்ளது. மேலும். இன்று (ஆகஸ்ட் 21) கனமழை பெய்யும் எனபதால் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
5 உத்தரகண்ட் மாவட்டங்கள் கனமழை எச்சரிக்கை:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூன், பவுரி, நைனிடால், சம்பவத், பாகேஷ்வர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.