தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் இன்று (நவ.13) முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. தற்பொழுது, தஞ்சாவூர், கோவை , திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இடி மின்னலுடன் கூடிய மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை குறைவு
வடகிழக்கு பருவமழையான அக்டோபர் 1 முதல் இன்று வரை 256 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1% குறைவு என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.