தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வலி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வருகின்ற 23-ம் தேதி அன்று வங்கக்கடலில் தெற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக ஒரு சில தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவ-23 முதல் நவ-30 வரையில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.