இன்று காலை முதலே சென்னையில் கனமழை., முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்….
சென்னையில் இன்று காலை முதலே எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 520கிமீ தூரத்தில் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நெருங்கி வருவதால் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதி என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டிதீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (அக்டோபர் 16) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 17) ஆகிய நாட்களில் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கி வருகிறது என்பதால், இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. எழும்பூர் , சிந்தாரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓட்டேரி உள்ளிட்டசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தற்போதே தேங்க ஆரம்பித்துவிட்டது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியில் மீட்புப்பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வேளச்சேரி பகுதிகளில் மீட்புபடகுகள் உடன் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகையில் மீட்புப்பணிகளுக்கான கட்டுப்பட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.
சென்னையில் 12 இடங்களில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணி ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 21 சுரங்கபாதைகளில் பெரம்பூர் சுரங்கப்பாதையில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கனமழை ரெட் அலர்ட் விடுத்த உடனேயே நேற்று முதலே வேளச்சேரி மேம்பாலத்தில் பலரும் தங்கள் கார்களை நிறுத்த தொடங்கிவிட்டனர். கடந்த வருடம் மழைநீர் தேங்கி தங்கள் கார்கள் பழுதடைந்த காரணத்தால், தற்போது மழைநீர் தேங்கும் முன்னரே தங்கள் கார்களை நிறுத்த தொடங்கி விட்டனர். இதனால் வேளச்சேரி மேம்பாலத்தில் சுமார் நூற்றுக்கணக்கான கார்கள் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து காவலர்கள் அதற்கு அபராதம் விதித்தும் வருகிறார்கள்.