இன்று 8 மாவட்டங்களில் கனமழை.. இயல்பை விட கூடுதலாக பெய்த பருவமழை – வானிலை மையம்.!
சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரு மாநிலங்களிலும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இயல்பை விட கூடுதலான பருவமழை
தமிழகத்தில் தொடர்ந்து மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 125% கூடுதலாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ மழையும், வுட் பிரையர் மற்றும் வென்ட்வொர்த் எஸ்டேட் பகுதியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை முதல் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.