இன்று 7 நாளை 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அப்டேட்.!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை குறித்த அப்டேட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று 7 மாவட்டங்களிலும் நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 22) தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மார்ச் 23) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், உடல் அசவுகரியங்கள் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.