வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு (மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை) பொதுவாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 22ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பாக, காலை நேரங்களில் வெயில் அல்லது மழை இருந்தாலும், இரவு நேரங்களில் குளிர் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை :
பங்குனி மாதம் தொடங்கியவுடனே வெயில் பல மாவட்டங்களில் கொளுத்தி எடுக்கிறது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுகிறது. இன்று முதல் முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
இன்று (16-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.