உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழக உள் பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் தலா 1 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று உருவான அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்றும் கூறியுள்ளது.
இன்று (அக்டோபர் 14) கனமழை (மஞ்சள் அலர்ட்), நாளை (அக்டோபர் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்), நாளை மறுநாள் (அக்டோபர் 16) அதி கனமழை ( ரெட் அலர்ட்), அக்டோபர் 17 – கனமழை (மஞ்சள் அலர்ட்) என தனித்தனியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கடல் பகுதிகளில் வரும் 17-ம் தேதி வரை 40 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.