வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்.. பெயர் என்ன தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (24ஆம் தேதி காலை) மாறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தீவிரப் புயலாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது.
புயலின் பெயர் என்ன?
வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு ‘REMAL’ (ரிமல்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற 26ஆம் தேதி மாலை வங்கதேசத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை, வங்காள விரிகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலில் இருப்பவர்கள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.