ஜில்..ஜில்…: ‘வட தமிழ்நாட்டில் அடர்ந்த பனிமூட்டம்’ சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்.!
காலை 7 மணி ஆகியும் பனி மூட்டம் நீட்டிப்பதால் பைக் மற்றும் கார்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே செல்கின்றனர்.
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. ரோட்டில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழுவு உள்ளதால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பனி மூட்டம் தொடர்பான வானிலை முன் அறிவிக்கை குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் தனது எக்ஸ் பக்கத்தில்,” வட தமிழகப் பகுதிகளில் அடர்ந்த மூடுபனி காணப்படும். நாளை காலையிலும் இதே போன்ற காட்சிகள் எதிர்பார்க்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Thick fog seen across north Tamil Nadu areas; tomorrow morning too similar scenes are to be expected. pic.twitter.com/E6TfTJL7r6
— Tamil Nadu Weatherman (@praddy06) February 4, 2025
வடகிழக்கு பருவமழை விலகி சென்ற நிலையில், தற்போது பனி காலம் முடிந்தும் தமிழகம் முழுவதும் அடர் பனிமூட்டம் காணப்படுகிறது. தற்பொழுது, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, இன்று (04-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.