புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்! வரலாறு காணாத மழையில் ஊத்தங்கரை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத வகையில் மழை பெய்த காரணத்தில் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி : ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேலும் வலுவிழந்து வட உள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றுலும் பாதித்துள்ளது. ஏனென்றால், இதுவரை இல்லாத அளவுக்கு ஊத்தங்கரையில் வரலாறு காணாத வகையில், 50.3 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. அந்த வெள்ள நீர் முழுவதும் சேலம் திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் ஆர்ப்பரித்து ஓடுவதால் வாகன ஓட்டிகளும் அந்த பகுதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவியுள்ளது.
அதைப்போல, போச்சம்பள்ளியில் பெய்த கன மழையின் காரணமாக போச்சம்பள்ளி காவல் காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது. அதைப்போல, பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இந்த பகுதியில் இருந்து வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்படுவதாகவும், எனவே, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.