உருவானது ‘டானா’ புயல்.. இனி சூறைக்காற்றுடன் கனமழை ஆட்டம் ஆரம்பம்.!
மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டானா எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
நாளை இரவு அல்லது நாளை மறுநாள் (அக். 25ம் தேதி) அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல், தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11 மாவட்டங்களில் கனமழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.