வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. வங்கக்கடலில் உருவாகும் டானா புயல்.!
மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
சென்னை : வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை (21-10-2024) 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதைத்தொடர்ந்து, அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுப்பெற்றது. மேலும், இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை டானா புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வரும் 24 அல்லது 25ம் தேதி அதிகாலை தீவிர புயலாக மாறி, ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது ஓடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில், புயலின் தாக்கத்தை குறைக்க ஓடிசா மாநில அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.