தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் மழை பெய்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் வரும் ஜூலை 18ஆம் தேதி வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் இல்லமால், இன்று அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கும், கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.