தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
இன்றும், நாளையும் தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும், சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, (இன்று) 08.10.2024, மற்றும் நாளை (09.10.2024:) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதைப்போல சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.