தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பே சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, வானிலை மையம் அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை குறித்த தகவல்களை அறிவித்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே சமயம், செப்டம்பர் 07 : நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலுர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் , கோயம்புத்தூர் , ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.