தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
தமிழகத்தில் இன்று திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது.
அதன்படி, இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.