48 மணிநேரத்தில்.., வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!
வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், “தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியானது இன்னும் 48 மணிநேரத்தில் நவம்பர் 10இல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11 முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரையில் மழையின் அளவு அதிகரிக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சில இடங்களில் அதிகணமழை பெய்யக்கூடும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.