வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை ஆரம்பிக்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை நிலவரம்
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.