உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 17 மாவட்டங்களில் மழை.!
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது.
மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இது நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
8 மாவட்டங்களில் மழை
அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யவிருக்கும் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, கரூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று இடி மின்னலுடன் மழை
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் 4ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.