பாம்பனில் வெளுத்து வாங்கும் கனமழை! காரணம் என்ன?
பாம்பன் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக 3 மணி நேரத்தில் 19 செமீ அளவில் மழை பெய்துள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது .
ஏற்கனவே, தென் தமிழகத்தில் அதிகனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. திருவாரூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை காலை வரையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் இருந்து 2.30 மணி அளவில் 3 மணி நேரத்திற்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பனில் சுமார் 19 செமீ மழை பெய்துள்ளது. இந்தளவுக்கு அதி கனமழை அப்பகுதியில் மட்டும் பெய்ததற்கான காரணத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, பாம்பன் பகுதியில் குறுகிய இடத்தில் அதிக மேகங்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.