புயல் ஆந்திரகடற்கரையோரம் நகர்ந்து செல்லும்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை,
‘நேற்று(டிசம்பர் 3) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (டிசம்பர் 4) அதே பகுதியில் நீடிக்கிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். டிசம்பர் 6-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.
இதனால் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தமட்டில் அதிகபட்சமாக, தேனி மாவட்டம் அரண்மனைபுதூரில் 6 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 4 செ.மீ. மழையும், பெரியகுளத்தில் 3 செ.மீ. மழையும், சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 2 செ.மீ. மழையும், ஆனைக்காரன்சத்திரம், திருவாடணை, சீர்காழி, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி யுள்ளது.’ இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் சில தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, தற்போது வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி, அந்த புயல் வலுவிழந்து ஆந்திர கடற்கரை நோக்கி சென்று விடும். இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்திற்கு புயல் ஆபத்து இல்லை எனவும் கூறியுள்ளனர். ஆனால், இந்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதியில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.