உன்னால் முடியும் தோழா!
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. இது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே கூட வருவதில்லை. நமக்கு நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு.
தன்னம்பிக்கையில்லா வாழ்வு
தன்னம்பிக்கை இல்லாத வாழ்வு, கூரையில்லாத வீட்டிற்கு சமம். தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதனால் வாழ்வில் இலட்சியத்தை அடைய முடியாது. நம்மிடம் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்றால், முதலில் நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய பலம், பலவீனம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நாம் எந்த காரியத்தை செய்தாலும், முதலில் இதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், நம்மால் நினைத்ததை சாதிக்க முடியாது.
தாழ்வுமனப்பான்மை அகற்று
தன்னம்பிக்கை நம்மில் வளருவதற்கு தடையாக இருப்பது நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான். இந்த மனப்பான்மை நம்மை விட்டு நீங்கினாலே தன்னம்பிக்கை தானாக நம்மிடம் வந்து விடும்.இதை என்னால் செய்ய முடியுமா? இதையெல்லாம் செய்வதற்கு நான் தகுதியானவன் இல்லை என நமக்குள் எழும் எண்ணங்கள், நம்மில் தன்னம்பிக்கையை வளர விடாமல் தடுக்கும் நச்சு களைகள். இவற்றை பிடுங்கி எரிந்து விட்டாலே தன்னம்பிக்கை நம்மில் வளர்ந்து விடும்.
நீ போராடி ஜெயிக்க பிறந்தவன்
உலகம் ஒரு போராட்டக்களம். அதில் நாம் போராடி ஜெயிக்க வேண்டும் என்றால் தன்னம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று. கடும் போட்டிகள் நிறைந்த இந்த உலகில், புதிது, புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் நம்முடைய ஆசை கனவு, இலட்சியம் எது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் அதற்கான வேலையை விரும்பி செய்யும் போது, கவனம் சிதறாமல் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், வெற்றியடைய முடியும். நாம் முயற்சி எடுத்தால், நாம் வெற்றியடைவதற்கான பாதை தானாக உருவாகிவிடும்.
மரம் வளருவதற்கு நீர் எவ்வளவு அவசியமான ஒன்றோ, அதுபோல நமது வாழ்வில் நாம் நினைத்ததை சாதிக்க தன்னம்பிக்கையும் அவசியமான ஒன்று.