சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு..!
வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களை தீர்க்க இந்த விநாயகர் வழிபாடு செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும்.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. சிலர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கின்றனர். சிலர் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கஷ்டங்களை சந்திக்கின்றனர். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வியை தழுவுவது, அடுக்கடுக்காக கஷ்டங்களை சந்திப்பது இது போன்று தொடர்ந்து நேரும் சங்கடங்களில் இருந்து விடுபட முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானின் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழிபாடு மூலமாக வேலையில் ஏற்படும் பிரச்சனை, வீட்டு சுப காரியங்களின் போது ஏற்படும் பிரச்சனை, திருமணத்தடை, குழந்தைப் பேறு பெறுவதில் தடை இது போன்ற அனைத்து கஷ்டங்களையும் தகர்த்தெறிய கூடிய இந்த வழிபாடு பற்றி பார்க்கலாம். முதலில் ஒரு நல்ல முழு தேங்காயை வாங்கி விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். கோவிலுக்கு சென்று அந்த தேங்காயை இரண்டாக உடைத்து, தேங்காயின் இரண்டு மூட்டுகளிலும் தேங்காய் எண்ணெயை ஊற்றி, மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.
அந்த தீபத்தை விநாயகரின் முன்பு வைத்துவிட்டு, மனதார 11 முறை தோப்புக்கரணம் போடுங்கள். முடிந்தால் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையில் 11 செய்து எடுத்து கொண்டு விநாயகர் முன்பு வைத்து நிவேதனம் செய்யுங்கள். அந்த கொழுக்கட்டையை அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யுங்கள். பின்னர் விநாயகரை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இறுதியாக விநாயகரிடம் கீழ்வரும் மந்திரத்தை கூறி பூஜையை நிறைவு செய்யுங்கள்.
ஓம் கணபதியே வருக
ரீங் கணபதியே வருக
ரீங்கார கணபதியே வருக
கங் கணபதியே வருக
எங்கள் குடும்பம் மேன்மையுற சங்கடங்கள் தீர்க்க
வசிவசி வய நமசிவாய நம
இதனை கூறி விநாயகரிடம் மனமுருகி உங்களுடைய கஷ்டங்களை கூறுங்கள். அந்த கஷ்டங்கள் கூடிய விரைவிலேயே தீரவேண்டும் என்ற வேண்டுதலை விநாயகரிடம் வையுங்கள். இறுதியாக நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை மாதம்தோறும் வரக்கூடிய சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை இது போன்று வழிபட்டால் உங்கள் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நிரந்திர தீர்வை அந்த முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமான் கொடுப்பான்.