வரலாற்றில் இன்று(21.02.2020)… தாய் மொழியை காக்க இன்று உலக தாய்மொழி தினம்…
கடந்த 1952 ஆம் ஆண்டு இதே நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேச தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்பட்டு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலக தாய்மொழி தினமாக முதன்முறையாக 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் கொண்டு வரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தினம் மூலம் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது யுனெஸ்கோ. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கருத்துகள் இந்த தினத்தில் முன்வைக்கப்படும். மேலும், தாய்மொழிகள் பல இன்று காலத்தால் அழிவைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச அளவில் 40 சதவிகிதம் மக்கள் தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பெறாமல் உள்ளனர் எனக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு. எந்த மொழியில் கற்றாலும் அதை அவரவர் தாய் மொழிக்கு கற்பனை செய்துதான் அதன் பொருளை அறிய முடியும். உலகின் முதல் நூறு கண்டுபிடிப்புகளை கண்டுப்டித்தவர்கள் அவரவர் தாய்மொழி மட்டுமே கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாய் மொழியை புறக்கணிப்பது தாயையே புறக்கணிப்பதற்க்குச்சமம். எனவே தாய்மொழியை வளர்போம் தலைமுறைகளை காப்போம்.