மூன்றாம் அலையின் ஆரம்பத்தில் உள்ளோம்-உலக சுகாதார நிறுவனம்..!
நாம் கொரோனா மூன்றாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது, டெல்டா வகை கொரோனா பரவி வருகிறது. தற்போது துரதிருஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா வைரஸ் மேலும் மாற்றமடைந்து உருவாகி வருகிறது. டெல்டா வகைகளில் உருமாற்றம் அடைந்து பல வகை கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த டெல்டா வகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இல்லையென்றாலும், விரைவில் அதிகம் பரவக்கூடிய கொரோனா வகைகளில் ஒன்றாக மாறும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சமீப காலமாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிக அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருவதால், அங்கு தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. உலக அளவில் நான்காவது வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது பரவி வரும் டெல்டா வகை கொரோனா, பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதது போன்றவற்றால் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.