பெண்கள் பீட்சா சாப்பிடுவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் காண்பிக்க கூடாது – ஈரான் அரசு!
பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது போன்ற காட்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடுவது போன்ற காட்சிகளில் பெண்கள் நடிக்கக் கூடாது எனவும், பெண்களுக்கு அலுவலகத்தில் ஆண்கள் டீ அல்லது காபி பரிமாறுவது போன்ற காட்சிகள் திரையிட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்தப் பெண்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டு தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறுகையில், இத்தகைய சில விதிமுறைகள் காரணமாக தாங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒளிபரப்பு செய்வதிலும் பெரும் நெருக்கடியை சந்திப்பதாகவும், இதனால் தான் இவ்வாறு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்களுக்கு எதிராக இவ்வாறு ஒடுக்குமுறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, அந்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.