#BREAKING: டிசம்பர் 4 முதல் குளிர்கால கூட்டத்தொடர்..!

5 மாநில சட்டசபை தேர்தல்கள் தற்போது நடந்து வருகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3-ந் தேதி வெளியாகிறது. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் தொடங்கக்கூடும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அறிவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் 19 நாட்களுக்கு 15 அமர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் கூறினார்.
அமர்வின் போது “பாராளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கு அம்ரித் கால் காத்திருக்கிறது” என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்வீட் செய்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிவடைந்து, இந்த ஆண்டு நடைபெறும் கடைசி நாடாளுமன்ற கூட்டத் தொடராகும்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மூன்று முக்கிய மசோதாக்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு முக்கிய மசோதா தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தொடரில் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த செப்டம்பர் 18 முதல் 22 வரை 5 அமர்வுகளைக் கொண்ட நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. இதில் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து அரசாங்கம் விவாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.