துருக்கியில் காட்டுத்தீ – 8 பேர் உயிரிழப்பு ; 864 பேர் படுகாயம்…!
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 864 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கியில் உள்ள மத்திய தரை கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீயில் பலர் சிக்கிய நிலையில், 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த துருக்கி நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி அவர்கள் கூறுகையில், மானவ்காட் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஏழு பேர், மர்மரிஸ் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் மானவ்காட் பகுதியில் 507 பேர், மெர்சின் பகுதியில் 154 பேர் மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியில் 203 பேர் என மொத்தம் 864 பேர் இந்த காட்டுத் தீயில் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மர்மரிஸ் பகுதியை சேர்ந்த 154 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மானவ்காட், மெர்சின், போட்ரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.