அகதிகள் என்றால் யார்…? இன்று உலக அகதிகள் தினம்…!
இன்று உலக அகதிகள் தினம்.
அகதிகள் என்றால் தனது சொந்த நாட்டில் போரினாலோ அல்லது வறுமையினாலோ நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம். உலகம் முழுவதும் சுமார் 7 கோடியே 80 லட்சம் பேர் அகதிகளாக இருக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கும் முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அகதிகள்
இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வங்கதேசம், இலங்கை, மியான்மர், திபெத் என பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக பலர் வந்துள்ளன. இவர்களுக்கு இந்திய அரசும் அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனால்ஒரு நாட்டில் இருந்து வரும் அகதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதில்லை. இந்தியாவை பொறுத்தவரையில், சீன எல்லையானதிபெத்தில் இருந்து வந்த அகதிகள் இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து வரும் அகதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் பெரும்பாலான நாடுகள் தங்கவைப்பதில்லை.
ஏனெனில் அகதிகள் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தின் மீதான உரிமையை அவர்கள் எதிர்காலத்தில் கேட்பதற்கான வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்பதனால் தான்.
தமிழகத்தில் அகதிகள்
தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். இதில் 29 ஆயிரம் பேர் நூற்றுக்கு மேற்பட்ட முகாமில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அகதிகள் தினம்
2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்காவில் ஜூன் 20-ம் தேதி அகதிகள் தினம் கொண்டாடப்படுவதால், இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றைய நாள் உலகில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால், அரசியல், சமூக சூழல் காரணமாக அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூறும் வகையில், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.