“விபரீதம் தரும் வெள்ளை அரிசி” – இவ்வளவு கேடானதா? வாருங்கள் அறியலாம்!
நாம் காலம் காலமாக அரிசியை முக்கிய உணவாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என்பதனை விட, தற்போதைய காலங்களில் எல்லாம் வெள்ளை வெளேரென எந்த அரிசி விலை அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் விரும்பி அதிகம் சாப்பிடுகிறார்கள். மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிட்டாலும் வியப்பதற்கில்லை. அந்த அளவுக்கு இந்தியர்கள் அரிசியை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக வைத்துள்ளனர். ஆனால் இந்த வெள்ளை நிற அரிசியை உண்பதால் உடலுக்கு மிகப்பெரிய கேடு உண்டாகும். அது குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வெள்ளை அரிசியின் தீமைகள்
மற்ற தானியங்களைக் காட்டிலும் அரிசியில் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளதால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்து அது கொழுப்பாக மாறுவதால் உடல் எடை அதிகரிப்பதுடன் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது. மேலும் அரிசியில் உள்ள அதிக அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் காரணமாக இது ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதுடன் நார்ச் சத்தும் குறைந்து காணப்படுகிறது. கோதுமை, ராகி, தினை, கம்பு, வரகு ஆகியவற்றில் உள்ள நார்சத்து அளவுகூட அரிசியில் கிடையாதாம். இதனால் தான் சர்க்கரை வியாதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேலும் கலோரிகள் இந்த அரிசி மூலமாக நமது உடலில் சேர்வதால் அவை கொழுப்பாக நாளடைவில் உருவாகி, இருதய ரத்த நாளங்களில் சேர்ந்து ரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. தோல் நீக்கப்பட்ட வெள்ளை அரிசியில் குறைந்த அளவு நார்ச்சத்து காணப்படுவதால் செரிமான ஆரோக்கியத்திற்கு உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதுடன், மலசிக்கல் உருவாகவும் காரணமாக அமைகிறது. எனவே அரிசி நமது தேசிய உணவாக இருந்தாலும் நமது உணவுகள் பட்டியலில் அவ்வப்போது சிறு தானியங்களையும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசி, கோதுமை, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி என மற்ற அரிசி வகைகளைப் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நல்லது.