WhatsApp-ல் ஆம்ஆத்மி MLAக்கு கொலை மிரட்டல்…!
புதுடெல்லி: வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் கிடைக்கப் பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ பங்கஜ் புஷ்கருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்படி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கட்சி மற்றும் ஆட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏ பங்கஜ் புஷ்கர் சமீபகாலமாக ஓங்கி குரல் கொடுத்து வருகிறார். அதனால் அவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் ஆகாஷ் பாட்டியா என்பவர் தொடங்கியுள்ள ‘இந்து பக்ஷ்’ எனும் வாட்ஸ் ஆப் குழுவில் புஷ்கர் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.வாட்ஸ் ஆப்பில் இணைந்த பின், புஷ்கரின் செல்போனில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வார்த்தைகள், குரல் மற்றும் படங்கள் கொண்ட கொலை மிரட்டல் தகவல்கள் ஓயாமல் வரத் தொடங்கியது. அதையடுத்து வக்கீல் பிரஷாந்த் பூஷண் மூலமாக போலீசில் புகார் அளித்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
புகார் மனுவில் வக்கீல் பூஷண் கூறியிருப்பதாவது:திமார்பூர் தொகுதி எம்எல்ஏவான எனது கட்சிக்காரர் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஜூலை 9ம் தேதி சேர்ந்தார். அதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் வரத்தொடங்கியது. அதோடு அவரது மனைவி மற்றும் மைனர் மகளும் கொலை செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. தொகுதியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவது பிடிக்காத யாரோ இது போன்ற மிரட்டல் விடுத்துள்ளார் என எனது கட்சிக்காரர் கருதுகிறார். அங்கீகாரமற்ற காலனிகளில் வசதிகள் செய்து தராமல் இருப்பதை அரசிடம் எனது கட்சிக்காரர் தட்டிக் கேட்டு, அது பற்றி சிபிஐ விசாரணை கேட்டிருப்பதை பொறுக்காத யாராவது இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடும் எனவும் கருத வேண்டியுள்ளது. எனவே திமார்பூர் எம்எல்ஏ புஷ்கருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்படி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் பூஷண் கூறியுள்ளார்.